கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் சிவகுமார். ஆயுள் தண்டனை கைதியான இவர், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமியின் வீட்டுக்கு இவரை வேலைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது வீட்டில் இருந்த ரூ.4.25 லட்சத்தைத் திருடியதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து, அவரது வீட்டின் கழிவறையைச் சுத்தம் செய்ய வற்புறுத்தியதாகவும், அப்போது அவர் அதற்கு மறுத்ததால், காவல்துறையினர் அவரைக் கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவரை தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக, அவரது தாயார் புகார் தெரிவித்தார். இது குறித்து அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, சேலம் சிறைக்கு மாற்றப்பட்ட ஆயுள் தண்டனை கைதி சிவக்குமாரிடம், சிபிசிஐடி எஸ் பி வினோத் சாந்தா ராம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். காலை 10:30 மணிக்கு சென்ற அவர்கள், இரவு 8:30 மணிக்குத்தான் விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்தனர். இதில் புதுத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கைதியின் வாக்கு மூலத்தை வீடியோவில் அந்தக் குழுவினர் பதிவு செய்தனர். முதலில் எஸ்.பி, பின்னர் டி.எஸ்.பி, அதன் பின்னர் இன்ஸ்பெக்டர் என ஒவ்வொருவரும் தனித்தனியாக விசாரித்தனர். இதன் காரணமாகத்தான் கைதி சிவக்குமாரிடம் 10 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.
கைதி சிவக்குமார் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் தற்போது சேலம் மத்தியச் சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.