காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்! இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை என்கிறார் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன். இது குறித்த அவரது அறிக்கை!
’’உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று அளித்த காவிரித் தீர்ப்பை நேற்று (01.06.2018), இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டுவிட்டு, காவிரி ஆணையம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டிருப்பது கடந்த காலங்களில், அது ஏமாற்றியதுபோல் இப்போதும் செய்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஆணையின்படி 11.12.1991 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அதை செயல்படுத்தவில்லை!
அடுத்து, காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றக் கட்டளையின்படி 19.02.2013 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அத்தீர்ப்பில் கண்டபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது. அதனால் அத்தீர்ப்பும் செயலுக்கு வரவே இல்லை!
இப்பொழுது மூன்றாவது முறையாக, செயல்படுத்தக் கூடிய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல், அரசிதழில் வெளியிட்டுவிட்டு இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டுள்ளது. விரைவில் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை 16.02.2018 அன்று அளித்தது. அதைச் செயல்படுத்தாமல், சாக்குப்போக்கு சொல்லி இதுவரை இழுத்தடித்து வருவது இந்திய அரசுதான்! இப்பொழுதும் செயல்படுத்தும் மேலாண்மை ஆணையம் அமைக்காமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்கவில்லை என்று காட்டிக் கொள்வதற்காக ஒப்புக்கு அரசிதழில் வெளியிட்டு ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.
அத்துடன், நடுவண் நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை வாரியத் தற்காலிகத் தலைவராக அமர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. யு.பி. சிங்கை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிகத் தலைவராக அமர்த்துவது என்பது, காவிரி மேலாண்மை ஆணையம் நடுவண் நீர்வளத்துறையின் ஒரு துணைக் குழுதான் (Sub Committee) என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
காவிரித் தீர்ப்பாய முடிவுகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை தனித்துவமான காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்றும், அதன் தலைவர் முழுநேரப் பொறுப்பில் செயல்படுவார் என்றும் கூறியுள்ளன. நடுவண் நீர்வளத்துறைச் செயலாளரின் கூடுதல் பொறுப்பாக காவிரி ஆணையத் தலைவர் பொறுப்பை வழங்குவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சீர்குலைக்கும் முயற்சியாகும்!
யு.பி. சிங் நடுநிலைத் தவறியவர் என்பதை, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததிலிருந்து அவர் செயல்பட்ட விதம் வெளிப்படுத்தியது.
எனவே, அரசிதழில் வெளியிடப்பட்டது என்ற அளவில் “வெற்றி!”க் களிப்பு காட்டிக் கொள்வது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக அமையும்! இந்திய அரசு இன்னும் காவிரியில் தமிழ்நாட்டின் சட்டப்படியான உரிமைகளை செயல்படுத்த முன்வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்ட போராட வேண்டியத் தேவை உள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரித்துக் கொள்கிறேன்.
’’