Skip to main content

மத வழிபாட்டுத்தலங்களை திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

Case dismissed for ordering to open religious places of worship

 

தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


கரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 23-ம் தேதி தொடங்கிய ஊரடங்கு, மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது, இந்த தடை  மே 17 வரை அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், மே 4-ம் தேதி முதல் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, சிறுகுறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்ட பணிகளை, சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஆனால், பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

 

 


இந்நிலையில், சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன், கோவில், மசூதி மற்றும் தேவாலயங்களை திறக்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை - திருமங்கலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.கே.ஜலில் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மனிதனின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவை இல்லாத டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க அனுமதித்த அரசு, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்கக்கூடிய, சாதகமான எண்ண ஓட்டத்தை உருவாக்கக் கூடிய, வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கவில்லை. மத வழிபாட்டுத் தலங்கள், ஒரு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.


 

nakkheeran app




இஸ்லாமியரின் புனித மாதமான ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்கு சென்று வர முடியவில்லை. முன்னோர்கள் பின்பற்றிய வழிபாட்டு முறைகளை அந்தந்த இடங்களுக்குச் சென்று நிறைவேற்ற முடியாத மன அழுத்தத்தில் பலரும் உள்ளனர் எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு, ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் 15-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது..

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், மத வழிபாட்டுத் தலங்களை திறந்தால் கூட்டம் அதிக அளவில் வரும், அவற்றை கட்டுப்படுத்த முடியாது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்,  பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்கள் இல்லை. மேலும், மத்திய அரசு மத வழிபாட்டுத் தலங்களை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து நீதிபதிகள் இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்