கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்பேரில் கடந்த மார்ச் மாதம், மாநில எல்லைகள் மூடப்பட்டன. இதனால், தமிழக-கேரள எல்லைப்பகுதியான குமுளி மற்றும் கம்பம்மெட்டு வழியாக கட்டப்பனை, நெடுங்கண்டம் போன்ற கேரளப் பகுதிக்குச் சென்ற தமிழக அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. பின் ஒருசில மாதங்களுக்கு முன் அண்டை மாநிலமான கேரளாவுக்குச் செல்ல இ-பாஸ் முறை நடைமுறைக்கு வந்தது. இதனால், தொழிலாளர்களும், விவசாயிகளும் இ-பாஸ் பெற்று பைக் மற்றும் கார், ஜீப்புகளில் போன்ற தனியார் வாகனங்களில் கேரளா சென்று வந்தனர்.
ஆனால், எல்லைப்பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி முதல் குமுளி மலைச்சாலையில் சிறு சிறு பாலங்கள் மற்றும் மராமத்துப் பணி நடைபெற்று வந்ததால், ஜனவரி 5-ஆம் தேதி வரை, குமுளி சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது மராமத்துப் பணிகள் முடிவடைந்ததால், இன்று காலை முதல் பேருந்துகளை இயக்க தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அனுமதி வழங்கினார். இதையடுத்து இன்று காலை எட்டு மணி முதல் கம்பத்திலிருந்து குமுளிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. பலமாதங்களுக்குப் பின் எல்லைப்பகுதியான குமுளிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.