பெரம்பலூரில் சுமார் 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை தினசரி ஏற்றி சென்று வர சுமார் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இந்த பேருந்துகள் சேலம், கடலூர், அரியலூர், திருச்சி மற்றும் விழுப்புரம் என பல மாவட்டங்களில் இருந்து மாணவர்களை காலை மாலை என இரு நேரங்களிலும் அழைத்து வருவதும் திரும்பகொண்டு விடுவதுமாக உள்ளன.
இந்த பஸ்கள் செல்லும் வேகம் கண்டு சாலையில் செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள், காரணம் போட்டிபோட்டு கொண்டு ஓட்டுனர்கள் பேருந்துகளை ஒன்றை ஒன்று முந்திசெல்வது தான். இதனால் மக்கள் மற்ற வாகன ஓட்டிகள் உயிர் பயத்தில் அச்சப்படுகிறார்கள். இப்படி செல்லும் கல்லூரி பேருந்துகளால் பல முறை விபத்துக்கள் ஏற்பட்டுகின்றன. அரசு, போக்குவரத்து துறை போலீஸ் என அனைத்தும் கல்லூரிக்கு சலாம் போடுவதால் பொதுமக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை உள்ளது. இதற்க்கு உதாரணம் இன்று ஏற்பட்ட பெரும் விபத்தே சாட்சி.
இன்று காலை அரியலூர் பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு பெரம்பலூரை நோக்கி ஒரே கல்லுரியை சேர்ந்த மூன்று பேருந்துகள் கடும் வேகத்திலும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல கடும் போட்டா போட்டியில் சீறி பாய்ந்தன. சித்தளி என்ற இடத்தில் முந்தும் போது சாலையோர கம்பத்தில் பஸ் மோதி பஸ்சுக்காக காத்திருந்த அந்த ஊரை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் மீதும் மோதி மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் காயத்திரி, சரண்யா, அகல்யா, செந்தாமரை, கோமதி மற்றும் ராதிகா ஆகிய மாணவிகள் படுகாயமடைந்தனர். இவர்களை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் காயத்திரி என்ற மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்து கண்டு கோபமடைந்த அப்பகுதி மக்கள் அக்கல்லூரி பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வருகை தந்து பொது மக்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு விபத்து பற்றி முறையாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் மக்கள் மறியலை கைவிட்டனர்.
காயமடைந்த மாணவிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தா மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார். "இப்படிப்பட்ட அதிகாரிகள் நலம் விசாரித்தால் மட்டும் போதாது கல்லூரிப் பேருந்துகளின் காட்டுத் தனமாக செல்லும் வேகத்திற்க்கு கடிவாளம் போட வேண்டும் அப்போதுதான் விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்ற முடியும்" என்கின்றனர் பொது மக்கள்.