Skip to main content

விவசாயி கொலை; அண்ணன் மகன் கைது 

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

brothers land sharing issue at salem district in thalaivasal 

 

தலைவாசல் அருகே, நிலத் தகராற்றில் விவசாயியை அடித்துக் கொலை செய்த அண்ணன் மகனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கோவிந்தம்பாளையம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் பூசமுத்து (85). இவருடைய அண்ணன் முத்துசாமி. இவர்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாமல் முத்துசாமி இறந்துவிட்டார். இதையடுத்து முத்துசாமியின் மகன் ராஜி (வயது 52) என்பவர் பூசமுத்துவிடம் தன் தந்தைக்குச் சேர வேண்டிய நிலத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்டு வந்தார்.

 

இந்நிலையில் கடந்த 8ம் தேதி, அப்பகுதியில் உள்ள நிலத்தில் பூசமுத்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜி, நிலப் பிரச்சனை தொடர்பாக பூசமுத்துவிடம் பேசினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த ராஜி, பூசமுத்து வைத்திருந்த கைத்தடியைப் பிடுங்கி சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே பூசமுத்து மயங்கி கீழே விழுந்ததைப் பார்த்த ராஜி, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் பூசமுத்துவை மீட்டு உடனடியாக ஆத்தூர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூசமுத்து உயிரிழந்தார். 

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தலைவாசல் காவல் நிலைய காவல்துறையினர் ராஜியை கைது செய்தனர். நிலத் தகராற்றில் சித்தப்பாவை, அவருடைய அண்ணன் மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் தலைவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்