![tenkasi](http://image.nakkheeran.in/cdn/farfuture/WjL3S5oUwrj2Pb7btMpgp6QlRDqLuujWe3xPNWOBUd4/1535457232/sites/default/files/inline-images/TenKasi%20%281%29.jpg)
அவர்கள் கடுமையானவர்கள்.! பார்க்கும் அனைவரையுமே சந்தேகக் கண் கொண்டே பார்ப்பார்கள்! இவர்களிடம் மனிதத்தை எதிர்ப்பார்க்க முடியாது.! இது தான் காவல்துறையினர் மீது மக்கள் மத்தியில் உள்ள பொதுவான அபிப்பிராயம். ஆனால், "நாங்களும் சமூகத்தை நேசிப்பவர்களே.!" என இளைஞர்கள் பட்டாளத்தின் உதவியுடன் வாய்க்கால் பாலத்தையும், அதனருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தையும் சீரமைத்து புதுமைப்படுத்தியுள்ளார் இன்ஸ்பெக்டர் ஒருவர்.
![tenkasi](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZMTJE3Kn5eaUCWsVSMNPDamsQJmbj7lsBWM3McpM1oY/1535457256/sites/default/files/inline-images/TenKasi%20%283%29.jpg)
தென்காசி டூ திருநெல்வேலிக்கு செல்ல வேண்டுமென்றால் குறுகலாய் திரும்பும் அந்த வாய்க்கால் பாலத்தைக் கடக்காமல் செல்ல முடியாது. அந்த வாய்க்கால் பாலத்தை கடப்பதற்குள் அரைமணி நேரத்திற்கும் மேலாகிவிடும். அவ்வளவு போக்குவரத்து நெரிசல். இதனை தீர்ப்பதற்கென்றே புறவழிச்சாலைத் திட்டமும், வட்டச்சாலை திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே முடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
![tenkasi](http://image.nakkheeran.in/cdn/farfuture/kYIsShXbpY-5ZuVqJqcwHad7c7BEl140lFU-F93LBDE/1535457280/sites/default/files/inline-images/TenKasi%20%285%29.jpg)
தற்சமயம், போக்குவரத்து நெரிசலை ஓரளவுக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு மட்டுமில்லாமல், துர்நாற்றமும், கழிவுகளும் சுமந்திருக்கும் வாய்க்கால் பாலத்தை உழவாரப்பணி செய்யும் இளைஞர்கள் பட்டாளத்தின் துணையுடன் சீரமைத்து, அருகிலிருந்து பேருந்து நிறுத்தத்திலும் வண்ணம் பூசி, "தினம் புத்தகம் படிப்போம்.! அறிவை வளர்ப்போம்.! பெண்மையைப் போற்றுவோம்.! பெண் கல்வியை வளர்ப்போம்" என சிந்தையை தூண்டும் வாசகங்களையும் எழுதி, காண்போர் வியக்கும் வண்ணம் அவ்விடத்தையே புதுமைப்படுத்தியுள்ளார் தென்காசி காவல் நிலைய இன்ஸ்பெக்டரான பாலமுருகன். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, இன்ஸ்பெக்டர் பாலமுருகனை வாழ்த்தி வருகின்றனர் பலர்.
நாமும் வாழ்த்துவோமாக.!!!