தமிழக கேரள எல்லையான நடுப்புனி சோதனை சாவடியில் லஞ்சப் பணமானது வாழை மரத்தில் சுருட்டி ஒளியவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைக்குட்பட்ட நடுப்புனி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியை கடந்து தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் தமிழகத்திற்கும், தமிழகத்திலிருந்து கேரளத்திற்கும் செல்கின்றன. இந்நிலையில் நடுப்புனி சோதனை சாவடியில் வரும் வாகன ஓட்டுநர்களிடம் சோதனையில் ஈடுபடும் சோதனை சாவடி அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக திடீரென நடுப்புனி சோதனை சாவடியில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சோதனை சாவடி அருகே உள்ள வாழை மரங்களின் பட்டைகளில் 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் தாள்கள் சுருட்டி வைக்கப்பட்டது கண்டெடுக்கப்பட்டது. மொத்தமாக வாழை மரங்களிலிருந்து 8,900 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இவை அனைத்தும் வாகன ஓட்டிகளிடம் இருந்து பெறப்பட்ட லஞ்சப் பணமாகும். இதை திருட்டுத்தனமாக வாழை மரங்களில் சுருட்டி சொருகி வைத்தது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக சோதனை சாவடி அலுவலக உதவியாளர் விஜயகுமார் மற்றும் கள அலுவலர் அசோகன் மற்றும் சாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.