
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழகத்தில் கடந்த நான்கரை மாதங்களாக பணி செய்த 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.4.34 கோடியை வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஒன்றியங்களிலும், பயனாளிகளை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதனையேற்றுக் கொண்டு தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக பித்தளைப்பட்டி பிரிவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, துணை செயலாளர் மார்கிரேட் மேரி, பொருளாளர் சத்திய மூர்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணை பெருந்தலைவர் ஹேமலதா மணி கண்டன், ஆகியோர் முன்னிலை வகி த்தனர். பிள்ளையார் நத்தம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உலகநாதன் வரவேற்று பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான பெண்கள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “கலைஞர் தமிழகத்தில் ஆட்சி செய்த போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டம் தான் 100 நாள் வேலைத்திட்டம். இந்த திட்டத்தை தமிழகம் சிறப்பாக செயல்படுத்தியது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் 2006-2010 ஆம் ஆண்டுகளில் 100 நாள் வேலைத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி ஜனாதிபதியிடம் விருதும் பெற்றது.
திமுக ஆட்சியின் போது 4 வாரத்திற்கு ஒருமுறை 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கு சம்பளப் பணம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு செப்டம்பர் மாதத்திற்கு பின்பு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை முறையாக வழங்கவில்லை. ரூ. 4 ஆயிரத்தி 34 கோடி நிலுவையில் உள்ளது. திமுகவை பழி வாங்குவதாக நினைத்துக்கொண்டு கிராமங்களில் வாழும் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. மோடி தலைமையிலான பாஜக அரசு நிதி வழங்காவிட்டாலும், இந்த திட்டத்தை புறக்கணித்தாலும் தொடர்ந்து கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தைத் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நிதி பற்றாக்குறை இருந்தாலும் மக்கள் நலனுக்கான நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் அரசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு உள்ளது” என்று கூறினார்.
அதன்பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ரூ. 4 ஆயிரத்தி 34 கோடி நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து கோஷம் இடப்பட்டது. அதில், ‘மோடியே மோடியே...!, அடிமைகளின் டாடியே...!, ஏய்க்காதே.... ஏய்க்காதே..., எங்கள் ஊதியத்தை உடனே வழங்கு, அடிக்காதே, அடிக்காதே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே..., எங்கள் சம்பளப் பணத்தைத் திருடாதே, கொடுத்துவிடு.... கொடுத்துவிடு... எங்கள் ஊதியத்தை கொடுத்துவிடு..” உட்பட பலவித கோஷங்கள் எழுப்பப்பட்டது. பொதுமக்களும் அவற்றை சொல்ல, சொல்ல அந்தப்பகுதி முழுவதும் கண்டன குரல் பயங்கரமாக எதிரொலித்தது.

இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேள்வி கேட்டபோது, “இது தொடக்கம் தான். மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுக்கும் ஆர்ப்பாட்டம் என்றதோடு தலைவர் ஸ்டாலின் அறிவித்தால் தொடர் போராட்டங்களை நடத்துவோம். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான பணத்தை மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நிறுத்தி வைத்தால் பொதுமக்கள் மத்தியில் மாபெரும் போராட்டம் வெடிக்கும். தமிழகத்தில் ஏதோ ஒரு கட்சியை சேர்ந்த தலைவர் சொன்னது போல் மன்னர் ஆட்சி நடைபெறவில்லை. சமூக நீதிக்கான மக்களுக்கான பெண்களுக்கான மக்களாட்சி தான் நடைபெறுகிறது” என்றார்.
இந்நிகழ்வில், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சிவக்குமார், துணை செயலாளர்கள் ராஜேந்திரன், எம்.சி.பாண்டி, வசந்தா கென்னடி, ஒன்றிய பொருளாளர் தொப்பம்பட்டி கருப்பையா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், திண்டுக்கல் மாநகர பொருளாளர் மீடியா சரவணன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர்கள் மல்லையாபுரம் சக்திவேல், கலாபச்சை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ், மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சிநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கும்மம்பட்டி விவேகானந்தன், பஞ்சம்பட்டி மணி, சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ், ஆனந்தி பாரதிராஜா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வி காங்கேயன் மற்றும் பொறுப்புகுழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர், மகளிர் அணியினருடன் நூற்று கணக்கான 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.