ஏற்காடுக்கு சுற்றுலா சென்று திரும்பியபோது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் மலைப்பாதையில் 70 அடி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் இளம்பெண் பலியானார். பலத்த காயம் அடைந்த அவரது கணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த காசிம் மகன் பாபு (35). இவருடைய மனைவி சசிகலா (32). பொங்கல் விழாவையொட்டி, ஜன. 14ம் தேதி கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்த தம்பதியினர், மாலை 3 மணியளவில் மலையை வீட்டு கீழே இறங்கியுள்ளனர்.
மலைப்பாதையின் 60 அடி பாலம் அருகே வந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்குள்ள 70 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில், பள்ளத்தில் உள்ள ஒரு பாறையில் சசிகலாவின் தலை மோதியுள்ளது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். பாபுவுக்கு கை, கால், தலை, உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
உயிருக்குப் போராடிய நிலையிலும் கூட பாபுவே, 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களை மீட்க போராடினர். இதற்கிடையே தகவல் அறிந்த ஏற்காடு காவல்துறையினரும் நிகழ்விடம் விரைந்தனர்.
விபத்து நடந்த இடம் 70 அடி பள்ளம் என்பதோடு, புதர் மண்டிய பகுதியாகவும் இருந்தது. அதனால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கயிறு கட்டி, பள்ளத்தில் இறங்கினர்.
சடலத்தை முதலில் மீட்டனர். பின்னர் பாபுவையும் கயிறு மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி பாபுவை மீட்டனர். அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்தால் ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினரின் சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசல் சீரடைந்தது. 70 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்ததில் பெண் பலியான சம்பவம் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.