சென்னை ராணி சீதை ஹாலில் நடந்த இரட்டை சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த்- ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜீன்ஸ்’ படத்தில் 'கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா' பாடலுக்கு இரட்டை சகோதரிகளாக ஐஸ்வர்யா ராய்கள் பரதநாட்டியம் ஆடுவதுபோல் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டிருக்கும். அதாவது, ஒரு ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக நடன இயக்குனர் ராஜுசுந்தரம் பரதநாட்டியம் ஆடி கிராஃபிக்ஸ் செய்திருப்பார். ஆனால், பிரபல டாக்டர் வீ.புகழேந்தி- சுகுணா தம்பதியரின் மகள்கள் பிரணவி- பிராப்தி இருவரும் உண்மையிலேயே இரட்டை சகோதரிகளாக பரதநாட்டியம் ஆடியது, சிறப்பு விருந்தினர்களையும், பார்வையாளர்களையும் வெகுவாக ரசிக்க வைத்தது.
பிரணவி, பிராப்தி ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நேற்று (04/03/2022) மாலை 06.00 மணியளவில் சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள ராணி சீதை ஹாலில் நடைபெற்றது. இந்த அரங்கேற்றத்தில் ‘தேனிசை தென்றல்’ தேவா (இசையமைப்பாளர்), நக்கீரன் ஆசிரியர், நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் (தமிழக அரசின் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினர்), காவல்துறை துணை ஆணையர் பெ. மகேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்கள்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருந்த சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் டெல்லிக்கு செல்ல இருந்ததால், கலந்து கொள்ள இயலவில்லை. எனினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இரட்டை சகோதரிகளான பிரணவி, பிராப்தி சென்னை சர்ச் பார்க் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்கள். பல்வேறு விருதுகளைப் பெற்ற லக்ஷமண சுவாமி என்பவரிடம் 10 வருடங்களாக பரதநாட்டிய பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஆடினார்கள். கடின உழைப்பு, ஈடுபாட்டாலும், இது நடந்தது என்கிறார்கள் இவர்களது பெற்றோர். அதற்கான, பாராட்டு சான்றிதழும் மேடையில் வழங்கப்பட்டது.
பிரணவியும், பிராப்தியும் பரதநாட்டியத்தில் மட்டுமல்ல நீச்சல், பந்து எரிதல், பேட்மிண்டன், தொடர் ஓட்டம் ஆகிய விளையாட்டுகளிலும் ஓவியம் வரைதல் உள்ளிட்ட கலைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.