நெல்லை மாவட்டம் சிந்துபூந்துறையில் முதியவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதீத கனமழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கி வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது. தற்போது படிப்படியாக நீர் வடிந்து வரும் நிலையில், மின்சார சாதனங்களை கவனத்துடன் கையாளுமாறு எச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நெல்லை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சிந்துபூந்துறை பகுதி மிகக் கடுமையாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதியாகும். அந்தப் பகுதியில் பல வீடுகள் முழுமையாக நீரில் மூழ்கும் அளவிற்கு வெள்ளத்தால் சூழ்ந்தது. அதனால் அந்த பகுதி மக்கள் மாற்று இடங்களில் தஞ்சம் அடைந்தனர். அந்த பகுதியில் வசித்து வந்த ஆறுமுகம் என்ற முதியவர் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். இத்தனை நாட்களுக்கு பிறகு நீர் வடிந்ததால் மீண்டும் இன்று வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டை சுத்தம் செய்துள்ளனர். அப்போது கிரைண்டரினுடைய பிளக் வயரை ஸ்விட்ச் பாக்ஸில் இருந்து எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி தூக்கி முதியவர் ஆறுமுகம் வீசப்பட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், முதியவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதியவர் ஆறுமுகத்தின் மனைவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இறந்த நிலையில் ஏழ்மையில் 3 பெண் குழந்தைகளுடன் வசித்துவந்த ஆறுமுகம் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.