நாகை மாவட்டம் திருக்குவளையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த வங்கியில் கடந்த ஆண்டு ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாகவும் அதில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த வங்கியின் மண்டல மேலாளர், நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், கடந்த ஆண்டு அந்த வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன். இவருடன் வங்கி கேஷியர் இளஞ்செழியன் மற்றும் வங்கி ஊழியர் விக்னேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்குவது போல டாக்குமென்ட்களை தயார் செய்து அதன் மூலம் ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மூவரையும் கைது செய்வதற்காக போலீசார் தேடிவந்தனர். மூவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில் தலைமறைவான வங்கி மேலாளர் கார்த்திகேயன், அவரது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக, நாகை குற்றப்பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டைக்கு வந்தனர்.
உளுந்தூர்பேட்டை போலீசார் உதவியுடன் கார்த்திகேயன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர் கார்த்திகேயன் வீட்டில் இருந்த அவரது கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பிறகு அவரை குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக நாகைக்கு அழைத்துச் சென்றனர். வங்கியில் கையாடல் செய்த வழக்கில் அதன் வங்கி மேலாளரை நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் கைது செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக வங்கி மேலாளரும் ஊழியர்களும் வங்கிப் பணத்தைக் கையாடல் செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
.