மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க தீவிர முயற்சியில் உள்ளது. பொதுத் துறைக்கு சொந்தமான பங்குகளை தனியார் வசம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தனியார் மயமாக்க மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக கூறி நாடு முழுக்க வங்கி ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து ஈரோட்டில் இன்று வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பாக ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பு தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வங்கி ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, வங்கி ஊழியர்கள் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு கொடுக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.