தேனி கும்பக்கரை அருவியில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கும்பக்கரையில் நேற்று பிற்பகல் ஒரு மணி முதல் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது. இதன் காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பொழுது அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்டனர் .தொடர்ந்து வனத்துறையின் முயற்சியால் மூவரும் மீட்கப்பட்டனர். அதேபோல் மறுகரையில் சிக்கிக் கொண்டிருந்த 30 பேர் வனப்பகுதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது தொடர்ந்து கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் அளவிற்கு பாதுகாப்பான சூழல் நிலவும் வரை குளிக்கத் தடை விதிப்பதாக வனத்துறை உத்தரவிட்டுள்ளது.