Skip to main content

“ஆத்தா! நீ பார்த்துக்கோ!” - எட்டு வழிச்சாலை ‘கூலியை’ யார் பெறுவர்?

Published on 06/07/2018 | Edited on 06/07/2018


எட்டு வழிச்சாலை வேண்டவே வேண்டாம் என்று பல வழிகளிலும் மக்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களுக்கு முன்னால், மனித முயற்சிகள் தோற்றுப்போய் விடுமோ என்று சந்தேகம் எழுந்துவிட்டதாலோ என்னவோ, தெய்வத்திடம் முறையிட ஆரம்பித்திருக்கின்றனர்.

அம்மன் சன்னதியில் கூழ் காய்ச்சுவது, மனு கொடுப்பது என, ‘கடவுளே!  உன்னைவிட்டால் எங்களைக் காப்பாற்ற வேறு நாதியில்லை’ என்று நம்பிக்கையோடு சரணாகதி அடைந்திருக்கின்றனர். தங்களின் வாழ்வாதாரம் பறிபோய்விடும் என்ற மனஅழுத்தத்தின் காரணமாக சிலர் சாமியாடவும் செய்கிறார்கள். அத்தகையோரைக் கண் கண்ட கடவுளாக எண்ணி, “ஆத்தா! நீ பார்த்துக்கோ! எங்க நிலத்துக்கு நீதான் காவல்!” என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்கள் மக்கள்.   

 

 

‘உள்ளக் குமுறலைக் கடவுளிடம் கொட்டிவிட்டால் காரியம் கைகூடி விடும்’ என்ற மக்களின் நம்பிக்கை குறித்து பகுத்தறிவாளர் ஒருவர்  தன் கருத்தை பகிர்ந்துகொண்டார்.  

“கடவுள் நம்பிக்கையோ, வேறு சிந்தனையோ, எதுவாக இருந்தாலும், அதற்கொரு காரணமும் தேவையும் இருக்கும். அந்தத் தேவையானது வேறு வழியில் பூர்த்தியாகிவிட்டால் அது காணாமல் போய்விடும். ஒரு மிகச்சிறந்த அரசின் கீழ் வாழும் சூழல் மக்களுக்கு வாய்த்துவிட்டால், மதமும் கடவுளும் தேவையற்றதாகிவிடும். மேற்கத்திய நாடுகளில் நாத்திகர்கள் பெருகியதற்கு இதுவே காரணம்.” என்றார். 

‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்ற மனநிலையில் பசுமைச்சாலை திட்டத்துக்குத் தங்களின் எதிர்வினையாக அவரவர்க்கு முடிந்த அத்தனையையும், மக்கள் செய்த வண்ணம் இருக்கின்றனர். ‘தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ அய்யன் திருவள்ளுவரின் வாக்கு பிரகாரம், மக்களுக்கோ, அரசாங்கத்துக்கோ,  உரிய கூலி கிடைத்தால் சரிதான்.!

 

சார்ந்த செய்திகள்