Skip to main content

சொத்துதான் வேணும்... அம்மா வேணாம்! தாயை அடித்துக்கொன்ற மகன்!!

Published on 15/03/2020 | Edited on 15/03/2020

கிருஷ்ணகிரி அருகே, தன்னைக் கேட்காமல் நிலத்தை விற்ற தாயை கட்டையால் அடித்துக்கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். லாரி ஓட்டுநர். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மனைவி பாக்யலட்சுமி (43). கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மகன் சதீஸ்குமார் (24). கேரளாவில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் இனிப்பு தயாரிக்கும் ஊழியராக வேலை செய்து வருகிறார். 


பாக்யலட்சுமிக்கு கடன் பிரச்னை உள்ளது. இதனால் தனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுள்ளார். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு, சதீஸ்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது பாக்யலட்சுமி நிலத்தை விற்று கடனை அடைத்த விவரங்களைக் கூறியுள்ளார். இதைக்கேட்ட சதீஸ்குமார், ''என்னைக் கேட்காமல் எப்படி நிலத்தை விற்கலாம்? அந்த நிலத்தைதான் நானும் நம்பி இருந்தேன். எதற்காக நிலத்தை விற்றாய்?'' எனக்கேட்டு தகராறு செய்துள்ளார்.

asset problem son mother incident police in kirishnagiri

நிலம் விற்றது தொடர்பாக வெள்ளிக்கிழமை (மார்ச் 13) இரவன்றும் தாய்க்கும், மகனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் எங்கோ கோபமாக வெளியே சென்ற அவர், சனிக்கிழமை (மார்ச் 14) அதிகாலையில் வீடு திரும்பினார். 


வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது தாயை, கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பாக்யலட்சுமி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதையடுத்து சதீஸ்குமார், கிருஷ்ணகிரி நகர காவல்நிலையத்தில் தானாகவே சென்று சரணடைந்தார். 


காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் (பொறுப்பு) மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சதீஸ்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். 


நிலம் விற்ற பிரச்னையில் பெற்ற தாயையே மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.





 

சார்ந்த செய்திகள்