அரூர் அருகே கோவில் திருவிழாவின் போது பக்தர்களை தேனீக்கள் கொட்டி 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டி கிராமத்தில் முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது பண்டிகைக்காக வெடிக்கப்பட்ட பட்டாசு அந்த பகுதியிலிருந்த தேன் கூட்டில் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தேன் கூட்டிலிருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கிருந்தவர்களை கொட்டியது. இதில் சிறியவர், பெரியவர் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக தேனீ கொட்டியதில் காயம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கோவில் திருவிழாவில் தேனீக்கள் கொட்டி 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.