பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் விவகாரங்கள் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் பாலியல் குற்றவாளி ராஜகோபால். பாஜகவைச் சேர்ந்த சுப்ரமணிய சாமி உள்ளிட்ட குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பலரும் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதில் சுப்ரமணிய சாமி ஒருபடி மேலே சென்று, “பள்ளி நிர்வாகத்தின் மீது உள்நோக்கத்துடன் தமிழக அரசு செயல்பட்டால் ஆட்சியைக் கலைத்துவிடுவேன்” என்று மிரட்டியுள்ளார். திமுக அரசுக்கு எதிராக, தமிழக கவர்னருக்கும் கடிதம் எழுதியுள்ளார் சுப்ரமணிய சாமி.
இந்த நிலையில், பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகத்துக்கு எதிராகவும், சுப்ரமணிய சாமியை கைது செய்ய வலியுறுத்தியும் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜராஜன்.
அவரிடம் நாம் பேசியபோது, “பத்மசேஷாத்ரி பள்ளி மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளைப் பள்ளியின் நிர்வாகத் தலைமைக்குப் பலமுறை கொண்டு சென்றுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுவாக, இப்படிப்பட்ட பாலியல் புகார்கள் வந்தால், உடனடியாக காவல்துறையினரிடம் குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக பள்ளி நிர்வாகம் புகார் கொடுக்க வேண்டும்.
அப்படி எந்தப் புகாரையும் பள்ளி நிர்வாகம் கொடுக்கவில்லை. இதனால், பாலியல் குற்றவாளி ராஜகோபால் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீண்டும் மீண்டும் பாலியல் சேட்டைகளை செய்யும் துணிச்சலைப் பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில், முறையான நடவடிக்கை எடுக்காமல், ராஜகோபாலின் விவகாரங்களுக்குப் பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்ததாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக, முறையான நடவடிக்கை எடுத்து மாணவிகளுக்குரிய பாதுகாப்பைத் தர தவறியதால் பள்ளி நிர்வாகமும் இதில் குற்றவாளிதான். அதனால், பள்ளி நிர்வாகத்தின் மீதும் வழக்குப் பதிவுசெய்ய வலியுறுத்தி தி.நகர் டெபுடி கமிஷனருக்கு ஆன்லைன் வழியாக புகார் அனுப்பியுள்ளேன்.
அதேபோல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அந்த ஆட்சியைக் கலைத்துவிடுவேன் என மிரட்டுகிறார் சுப்பிரமணிய சாமி. மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு தந்த ராஜகோபாலை கைது செய்திருப்பதுடன் இதன் பின்னணியில் பள்ளி நிர்வாகத்துக்கு தொடர்பு உண்டா என்றும் முறையான விசாரணையை நடத்திவருகிறார்கள் காவல்துறையினர். இந்த விவகாரத்தில் தவறு செய்துள்ள எவரும் தப்பித்துவிடாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில், பள்ளி நிர்வாகமும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுவிடுமோ என பயந்து, தமிழக அரசை மிரட்டிப் பார்க்கிறார் சுப்பிரமணிய சாமி. இதற்காக, பிராமணர் - பிராமணரல்லாதோர் என பேசி வெறுப்பு அரசியலைத் தூண்டிவிடுகிறார். இப்படி பேசுவதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கப் பார்க்கிறார் சுப்பிரமணிய சாமி. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மிரட்டுவதும், சாதி ரீதியாக வெறுப்பு அரசியலைத் தூண்டுவதும் தேச விரோத செயல்களுக்கு ஒப்பானது. அதனால், சுப்பிரமணிய சாமிக்கு எதிராக தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அடையாறு காவல்துறையினருக்கு ஆன்லைன் வழியாக புகார் தெரிவித்திருக்கிறோம். இந்தப் புகார் மீது வழக்குப் பதிவுசெய்து சுப்பிரமணிய சாமியை கைது செய்ய போலீஸார் தவறினால், நீதிமன்றத்தை அணுகுவோம்” என்று கூறுகிறார் வழக்கறிஞர் ராஜராஜன்.