ஈரோடு அடுத்த சின்ன சடையம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு இந்தக் கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மண்டல பூஜை நிறைவு காரணமாக ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்காகக் கோவில் நிர்வாகி குப்புசாமி தலைமையில் நிர்வாகிகள் நேற்று ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றனர். இதற்காக தங்களது இருசக்கர வாகனங்களை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட பந்தல் முன்பு நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவில் திடீரென அந்த 10 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கொண்டு இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியினர் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள் முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் மின்சாதன பொருட்களோ அல்லது இருசக்கர வாகனங்களில் எலக்ட்ரிக் வாகனமும் இல்லாத நிலையில் தீ விபத்து நிகழ்ந்துள்ளதால் மர்ம நபர்கள் யாரேனும் நள்ளிரவில் வந்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்துச் சென்றார்களா என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.