"ஹைட்ரோ கார்பன் திட்டம் என்கிற பெயரில் மண்ணையும், அதில் விளையும் பயிரையும், அதை நம்பியிருக்கும் மக்களையும் அழித்தொழித்து விட்டு, யாருக்காக ஆட்சி நடத்தப் போகிறார்கள்," என்கிற கோபக் குரல் டெல்டா மாவட்டங்களில் ஓங்கி ஒலிக்கத் துவங்கி இருக்கிறது.
நாகை மாவட்டம் மாதனம் முதல் மே மாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரத்திற்கு கெயில் நிறுவனம் எண்ணெய் எரிவாயு எடுத்துச் செல்வதற்காக, நடவுகளையும், பருத்திகளையும் அழித்துக்கொண்டு, குழாய் பதிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறனர். அதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சீர்காழி அருகில் உள்ள மாதனம் மற்றும் அதனை சுற்றுப்பகுதியில் எடுக்கக்கூடிய ஹைட்ரோகார்பன் எரிவாயுவை மேமாத்தூருக்கு எடுத்துச் செல்வதற்கு விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினரின் உதவியோடு குழாய் பதிக்கும் வேலைகளை நடத்திவருகிறது கெயில் நிறுவனம். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துவருவதோடு, பல போராட்டங்களையும் நடத்திவருகின்றனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு தரங்கம்பாடி தாலுகா பகுதியில் கோடை சாகுபடி செய்திருந்த நாற்றங்கால் பகுதியை நாசம் செய்து குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. இதை தெரிந்துகொண்ட விவசாயிகள் தடுத்துநிறுத்தி செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மயிலாடுதுறை டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் வந்த போலீசார் நடவு வயலை நாசம் படுத்தக்கூடாது என்றுகூறி வேலையை தற்காலிகமாக நிறுத்தினர். அதேபோல் காலகஸ்திநாதபுரம் பகுதியில் குறுவை சாகுபடிக்காக விதை விட்டிருந்த நிலத்திலும், உழவு செய்த வயல்களிலும் குழாய் பதிப்பதற்கு இயந்திரங்களை இறக்கி நாசம் செய்தனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போலீசிலும் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் முடிகண்ட நல்லூர் கிராமத்தில் விவசாயிகள் பாலு, மோகன்தாஸ், சிவானந்தம், ஆகியோர் தங்கள் வயல்களில் குறுவை நடவு பணிகளை செய்துள்ளனர். பயிர்கள் வளர வேண்டிய நிலையில் திடீரென கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதற்காக பொக்லைன் இயந்திரத்தை நடவு செய்த வயலின் நடுவே அழித்துக்கொண்டு, புதைக்க சென்றனர். அதனை பார்த்து கதறிய விவசாயிகள் இயந்திரங்களை சுற்றிவளைத்து நிறுத்திவிட்டு, போலிசில் புகார் அளித்தனர்.
அதோடு நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் தலைமையில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் கூறுகையில், "விவசாயிகள் தொடர்ந்து முன்வைக்கும் கோரிக்கைகளான மாதானம் முதல் மே மாத்தூர் வரை உள்ள விவசாயிகள் ஒன்றுகூட்டி கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். குழாய் வெடிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டால் மக்களை பாதுகாத்து கொள்வதற்காக பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும். விபத்து ஏற்பட்டால் விவசாயிகளை பொறுப்பாக்கி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடிய விதிகளைப் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்ட காலமாக விவசாயிகள் முன்வைக்கின்றனர். ஆனால் அதனை புறக்கணித்துவிட்டு அடாவடித்தனமாக, தமிழக அரசின் ஒத்துழைப்புடன், காவல்துறையின் அடக்குமுறையோடு குழாய் பதிப்பது வேதனையாக இருக்கிறது. மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்த உள்ளோம்." என்கிறார்.