
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் புலத்தில் கடல்வாழ் உயிரியியல் உயராய்வு மையம் பரங்கிப்பேட்டையில் உள்ளது. இதில் நீல புரட்சி மாற்றத்தில் சவால்களும், நம்பிக்கையும் என்ற தலைப்பில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியலை மேம்படுத்துதல் திட்டத்தின் நிதியுதவியுடன் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் பிப்ரவரி 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதன் முதல்நாள் துவக்கவிழாவில் உயராய்வு மையத்தின் முதல்வர் சீனிவாசன் விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார். கொல்கத்தாவிலுள்ள இந்திய விலங்கியல் ஆய்வு மைய இயக்குநர் கைலாஷ்சந்திரா கருத்தரங்கை துவக்கி வைத்து மாணவர்களிடம் பேசுகையில், இந்த கருத்தரங்கம் கடல் வாழ் உயிரினங்களின் அனைத்து முன்னேற்றங்களையும், சமீப காலங்களில் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புகளைப் பற்றிய தகவல் தொடர்பானது. இதனை மாணவர்கள் நன்கு அறிந்து மீனவர்கள் மற்றும் கடலை சார்ந்து வாழும் மக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார்.
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முருகேசன் விழாவிற்கு தலைமை வகித்து உரையாற்றுகையில், கடல் உயிரியியல் மற்றும் உயிர்தொழில்நுட்பப் பகுப்பிலுள்ள ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கி கூறினார். மேலும் பனிரெண்டாம் வகுப்பு முடித்து மீன் வளர்ப்பு படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கடல் சார்ந்த அரசு மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேபோல் அவர்கள் சுயதொழில் தொடங்கினால் அதிகளவு வருமானம் பெறவும் வாய்ப்புள்ளது என்றார்.
இக்கருத்தரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் பலன் கிடைக்கும். இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த, மீன்வள ஆய்வியல் மைய முதன்மை விஞ்ஞானி சிவகுமரன், சென்னை செட்டிநாடு பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், அறிவியல் புல முதல்வர் கபிலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கடலில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு நீலப்புரட்சியின் பொருளாதரத்தை மேம்படுத்தலாம் என்று விளக்கிகூறினார்கள்.
இந்த கருத்தரங்கில் சீனா, இலங்கை, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் தொழில்நுட்ப ஆய்வில் தங்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை வழங்கினார்கள். இந்திய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்றனர். உயராய்வு மைய இணைபேராசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார். முன்னதாக கருத்தரங்கு மலரை துணைவேந்தர் முருகேசன் வெளியிட அதனை செட்டிநாடு பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுகொண்டனர்.