இந்த மாதம் முழுக்க அங்கன்வாடி பெண் பணியாளர்களை வழக்கமான பணிகளுக்கிடையே புதிய செயல்பாடுகளில் இறக்கிவிட்டுள்ளது அரசு நிர்வாகம்.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக அறிவித்துள்ளது. இந்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லும் புதிய வேலையில்தான் தமிழகம் முழுக்க அங்கன்வாடி பெண் பணியாளர்களை வீதிகளில் இறக்கியுள்ளது. அதன்படி கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள அனைவருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு கண்காட்சியும், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், உணவு தானியங்கள், கீரை வகைகள் எவை, எவை என்பது பற்றி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அங்கன்வாடி பள்ளியில் பணிபுரியும் பணியாளர்கள்,ஆசிரியர்கள் விரிவாக எடுத்துக் கூறி வருகிறார்கள்.
மேலும் மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த இனிப்பு மாவு மற்றும் பாயாசம் வழங்குகிறார்கள். கூடுதலாக ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மூலமாக மக்களுக்கு என்னென்ன நோய்களெல்லாம் தீர்க்கப்படும், அதேபோல் நமக்கு நோய்கள் வராமல் தடுக்க நாம் எவ்வாறு இயற்கை காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த பிரச்சார யுத்தி வித்தியாசமான முறையில் செய்யப்படுகிறது. அங்கன்வாடி பெண் பணியாளர்கள் சிலர் பாடல் மூலமும், பலர் ஆடல் மூலமும் மேலும் சிலர் கும்மியடித்து ஆடியும் இந்த பிரச்சாரத்தை செய்கிறார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய பெண் ஆசிரியைகள் சிலர் "ஏங்க சார் எங்களுக்கு என்ன தெருவில் கும்மியடித்து ஆட ஆசையா மேலதிகாரிகள் உத்தரவு போடுறாங்க சார். இந்த திட்டம் மத்திய அரசு திட்டம் இதை தமிழக அரசு முழுமையாக விசுவாசமாக செய்ததாக மத்திய அரசுக்கு காட்ட வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள். நாங்கள் யாரிடம் சொல்லி முறையிட" என பரிதாபமாக கூறினார்கள்.