Skip to main content

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அன்புமணியின் மகள் திருமணம்!

Published on 02/09/2021 | Edited on 02/09/2021

 

l

 

சென்னையில் நேற்று (1.09.2021) பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதி தம்பதி ஆகியோரின் பெயர்த்தியும், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி இராமதாஸ் - சௌமியா அன்புமணியின் மகளுக்குத் திருமணம் நடந்தது.

 

பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா சௌமியா அன்புமணி, - சென்னை சோழிங்கநல்லூர் பூ. தனசேகரன் - கலைவாணி தனசேகரன் ஆகியோரின் மகன் த. ஷங்கர் பாலாஜி இணையரின் திருமணத்தை ராமதாஸ் தலைமை ஏற்று நேற்று (01.09.2021) நடத்தி வைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் மு. கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மற்றும் மணமகள் - மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாமக தலைவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
DMK MLAs notice to PMK leaders!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். 

DMK MLAs notice to PMK leaders

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், “எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்வில் இருந்து விலக தயார். அப்படி நிரூபிக்கப்படாவிட்டால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொது வாழ்வில் இருந்து விலக தயாரா?.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கைதானவர் திமுக நிர்வாகி இல்லை. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கட்சி ஸ்டிக்கர்கள் தான் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக உதயசூரியன் எம்எல்ஏ பேசுகையில், “கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ அரசியல் ஆதாயம் வேண்டி புகார் தெரிவித்துள்ளார். எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை பாமக தலைவர்கள் வைத்துள்ளனர். 37 ஆண்டுக்கால பொது வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர்கள் பேசியுள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார். 

DMK MLAs notice to PMK leaders

இந்நிலையில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு திமுக எம்எல்ஏக்களான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்களை இருவரும் தொடர்புப்படுத்திப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் உடனே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் வில்சன் சார்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டிஸில், “கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இருவர் மீதும் வைத்த குற்றச்சாட்டைத் திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் 10 லட்சம் ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு தொடரப்படும். அந்த நிதியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குச் செலுத்தும் வகையில் வழக்கு தொடரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்” - அன்புமணி வலியுறுத்தல்!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
"NEET exam should be canceled permanently" - Anbumani insists

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நீட், நெட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “ சில போட்டித் தேர்வுகள் குறித்த சமீபத்திய குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, மருத்துவ மாணவர்களுக்கான தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் முதுகலை நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜூன் 23 அன்று நடைபெறவிருந்த நீட் முதுகலை நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு சுகாதார அமைச்சகம் மனப்பூர்வமாக வருந்துகிறது. மாணவர்களின் நலன் கருதியும், தேர்வுச் செயல்முறையின் உண்மைத் தன்மையை பேணவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யுங்கள்!. இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது மாணவர்களின் நலனையும், மனநிலையையும் சிறிதும் உணர்ந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வுகள் நடத்தப்படும் விதம் தொடர்பாக பல்வேறு  குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நீட் தேர்வு நடத்தும் முறை வலிமையாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகவே நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசின் நோக்கம் சரியானதாக இருக்கலாம், ஆனால் இந்த முடிவால் மாணவர்கள் அனுபவித்த துயரமும், அவதியும் விவரிக்க முடியாதவை.

முதுநிலை நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பலருக்கு மாநிலம் விட்டு மாநிலம் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுக்காக மாணவர்கள் இரு நாட்களுக்கு முன்னதாகவே புறப்பட்டு தேர்வு மையம் உள்ள ஊரில் தங்கியிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறைந்தபட்சம் நீட் தேர்வை ஒத்தி வைக்கும் முடிவை 3 நாட்களுக்கு முன்னதாக எடுத்திருந்தால் கூட இந்த மன உளைச்சலை தவிர்த்திருக்கலாம்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் அதைப் போக்க முடியவில்லை. எனவே நீட் தேர்வு சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.