விருதுநகரில் நடைபெற்ற, செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியதாவது, “விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் 2,600 பேர் வரை போலியாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதை, மாவட்ட ஆட்சியரே தெரிவிக்கிறார்.
பணத்தை திரும்பப் பெறுவது மட்டும் போதாது. தவறு எப்படி நடந்தது? எந்தெந்த கட்சிக்காரர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்? இதில், பி.ஜே.பி, அ.தி.மு.கவினர் சம்பந்தப்பட்டுள்ளனரா? 5 லட்சம் பேர் வரை போலியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வரே கூறுகிறார். அப்படியென்றால் அரசாங்கம் தூங்கிக் கொண்டிருந்ததா? 5 லட்சம் பேர் என்றால்.. மிகப்பெரிய ஊழல் அல்லவா நடந்திருக்கிறது? இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இரண்டு ஆளுங்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து இந்தத் தவறைச் செய்திருக்கின்றன. முதல்வர் சொல்வதே 5 லட்சம் பேர் என்றால், மேலும் நடந்திருக்கலாம் என்றே தெரிகிறது. அதற்காகத்தான் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்கிறோம். விசாரணை இல்லாமல் அதிகாரிகள் சொல்வதையும், அமைச்சர் சொல்வதையும் நம்ப முடியாது" என்றார்.
மேலும், நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், எந்த மாநிலத்திற்கு நீட் தேவையோ, அந்த மாநிலத்தில் வைத்துக் கொள்ளலாம். எந்த மாநிலத்துக்கு நீட் தேவையில்லையோ, அங்கே வைக்க வேண்டியதில்லை. கல்வி என்பது இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. அதைச் செய்வதற்கு திராணி இல்லாத அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளுக்கு தி.மு.க ஆட்சிக்கு வராது என்று அமைச்சர் உதயகுமார் கூறியிருக்கிறார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் சொல்வதையோ கே.டி.ராஜேந்திரபாலாஜி சொல்வதையோ சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர்களைப் பொறுத்த மட்டிலும், சிலகாலம் இருக்கக்கூடியவர்கள். அதற்குமேல் அவர்கள் இருக்க வேண்டிய இடம் மதுரை மத்திய சிறைச் சாலையாகத்தான் இருக்கும். ஊழல் செய்துள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் இது பொருந்தும்.” என்றார், அதிரடியாக.