சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை என்பது நடைபெற்று வருகிறது. அவ்வப்போது சட்டவிரோத மது விற்பனை தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் சர்வ சாதாரணமாக மளிகைக் கடை ஒன்றில் மது விற்பனை நடைபெறுவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் பட்டப்பகலிலேயே முதியவர் ஒருவர் மதுவை வாங்கி அங்கேயே பாட்டிலில் அளவு பார்த்து ஊற்றும் அந்தக் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் ஒருவர் கடை உரிமையாளரான பெண்ணிடம் மது பாட்டில் வேணும் எனக் கேட்க, அந்தப் பெண் காசை வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டு, 'எடுத்து வர போயிருக்காங்க'' எனச் சொல்கிறார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மது பாட்டில்களை கொடுக்கிறார். 175 ரூபாய்க்கு விற்கப்படும் மது அந்த கடையில் 210 ரூபாய்க்கு விற்கப்படுவது அந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.