நேற்று சென்னையில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகமாக பதிவாகிய நிலையில் இன்று மேலும் அதிகமாகியுள்ளது காற்று மாசு.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கீட்டின்படி காற்றின் தரக்குறியீடு 100லிருந்து 200 ஆக இருந்தால் அது மிதமான மாசுபாட்டை குறிக்கும், 200 முதல் 300 வரை இருந்தால் மோசமான மாசுபாடு, 300 இருந்து 400 வரை இருந்தால் மிக மோசம் என்று குறிக்கும். தீபாவளி பண்டிகை காரணமாக பட்டாசு வெடிப்பதன் மூலம் காற்றின் மாசு அதிகரிப்பது வாடிக்கை. நேற்று மாலை 7 மணி நிலவரப்படி சென்னையில் ஒட்டுமொத்த சராசரி காற்றின் தரக்குறியீடு 118 ஆக பதிவாகியது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல் படி நேற்று சென்னை மணலியில் அதிமாக காற்றின் தரக்குறியீடு 229 என பதிவானது.
இந்நிலையில் தீபாவளி நாளான (31/10/2024) இன்று காலை 7 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் சென்னையைப் பொறுத்தவரை காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மணலில் 254 ஆகவும், அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் மூன்று இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. கொடுங்கையூரில் 159, வேளச்சேரியில் 163, ராயபுரத்தில் 164 என மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 154, கடலூரில் 142, கோவையில் 104, புதுச்சேரியில் 119 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மிதமான அளவில் அதிகரித்துள்ளது.