நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படம் திரைக்கு வரும் முன்பே பஞ்சாயத்துகளையும் கூட்டிக் கொண்டே வந்தது.
சர்கார் திரைக்கு வந்த பிறகு இலவசங்களை தூக்கி வீசுவது போன்ற காட்டி ஆளும் அதிமுக வுக்கு வெறுப்பை உண்டாக்கியதால் திரையரங்கங்கள் முன்பு அமைச்சர்கள் முதல் ஆளும் அதிமுக பிரமுகர்கள் ஆர்ப்பாட்டங்கள் முற்றுகை போராட்டங்களை நடத்தினார்கள். சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்கவில்லை என்றால் படத்தை ஓடவிடிமாட்டோம் என்றனர்.
மற்றொரு பக்கம் விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அதிமுகவினர் கிழத்து எரிந்தனர். பல ஊர்களில் போலிசாரை வைத்து அனுமதி பெறாமல் பதாகை வைத்ததாக அகற்றியதுடன் ரசிகர்கள் மீது வழக்குகளும் போட்டார்கள்.
இவற்றை எல்லாம் கண்டிக்கும் விதமாக புதுக்கோட்டையில் முன்னாள் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளரும் அதிமுக 30 வது வட்டச் செயலாளருமான ஸ்டாலின் மாஸ்கோ தலைமையில் கருப்பு சட்டை அணிந்து சர்கார் ஓடும் திரையரங்கம் முன்பு பேனர் கிழிப்புக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அதிமுக வட்டச் செயலாளரே அதிமுகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி ஸ்டாலின் மாஸ்கோ நம்மிடம், ’’மக்கள் இயக்கம் தான் முக்கியம். தளபதிக்கு ஒரு பிரச்சனை என்றால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் இப்ப மக்கள் இயக்கத்தில் பொறுப்பில் இல்லை என்றாலும் மக்கள் இயக்கம் என்பது என் ரத்தத்தோடு ஊறிய இயக்கம். அதிமுக பொறுப்பில் இருந்தாலும் தளபதியின் பேனர் கிழிப்பை கண்டித்து ரசிகர்களுடன் ஆரப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். ஒரு விரல் புரட்சி சர்க்கார் என்பதை அனைத்து தலைவர்கள் படங்களுடன் தான் பதாகை வைத்திருக்கிறேன்’’ என்றார்.