Skip to main content

விவசாயிகளிடமிருந்து வேளாண் பொருட்கள் நேரடி கொள்முதல்! -உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020
High Court



ஊரடங்கின் காரணமாக,  விவசாயிகளிடம் இருந்து வேளாண்  பொருட்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.


கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்ற விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாத,  பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வேளாண்துறை துணைச் செயலாளர் ரவிக்குமார் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

 


அதில், தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மூலம் விளைபொருட்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டதில் இதுவரை 6000 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள்  1,100 மொபைல் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டுள்ளது. 
 

 

கோயம்பேடு சந்தை மூடப்பட்டபோது,   தோட்டக்கலை மற்றும் கூட்டுறவுத் துறை சார்பாக கோயமுத்தூர், சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினம்தோறும் 500 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள் மற்றும் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு சென்னையில் விநியோகிக்கப்பட்டது.  தங்களது பொருட்களை நேரடியாக விவசாயிகள் சந்தைப்படுத்தும் உழவர் சந்தை மூலம்,  தினந்தோறும் 1400 மெட்ரிக் டன் அளவிலான பொருட்கள்,  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலக்கட்டத்தில் மட்டும் 53,593 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. 


எளிதில் கெட்டுப் போகும் பழ வகைகளை  அண்டை மாநிலங்களுக்கு  அனுப்ப விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் விளைபொருட்களை பாதுகாக்க குளிர்சாதனக் கிடங்குகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மொத்தமுள்ள 138 குளிர்சாதன கிடங்கில் 7755 மெட்ரிக் டன் அளவிலான விவசாய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, உழவன் செயலி மூலமும் பொருட்களை சந்தைப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

தோட்டக்கலைத்துறையின் சார்பில்  இ - தோட்டம் இணையதளம் மூலம் swiggy, zomato உள்ளிட்ட உணவு விநியோகிக்கும் நிறுவனங்களோடு ஒன்றிணைந்து நுகர்வோருக்கு குறைந்த விலையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கப்படுகிறது. அதுபோல,  நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 37,635 விவசாயிகளிடமிருந்து 2.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான தொகையாக 522.64 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  விவசாயிகளின் நலன் கருதி சந்தை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்காக கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன என தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. 

 

 


அரசின் விரிவான பதில் மனுவுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதை மாவட்ட வாரியாக உள்ள குறைதீர்ப்பு அலுவலகத்தில் முறையிடலாம் எனவும், மேற்கொண்டு ஏதேனும் கூடுதல் நடவடிக்கை தேவை என்றால் மனுதாரர்  நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம் எனவும் தெரிவித்து வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்