Skip to main content

பெரியார் அணையின் நீர்த்தேக்க பகுதியை ஆக்கிரமிக்கும்  கேரளா; விவசாய சங்கத்தின் முற்றுகை போராட்டம்!  

Published on 02/12/2024 | Edited on 02/12/2024
 Agricultural Association blockade struggle against the Kerala government

முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க பகுதியை  ஆக்கிரமிக்கும் கேரளாவை கண்டித்து, கூடலூர் லோயர்கேம்பில் விவசாய  சங்கங்கள் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இணைந்து முற்றுகைப்  போராட்டம் நடத்தினர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில்  தொடர்ச்சியாக கேரள அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது.  தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான மக்கள் விரோத போக்கையும் கடைப்பிடித்து  வருகிறது. 999 ஆண்டுகால ஒப்பந்தம் உள்ள நிலையில், கேரளத்தில் உள்ள சிறு  சிறு அமைப்புகள், அணையின் ஸ்திரத்தன்மை குறித்து பொய் பிரச்சாரம்  செய்து வருகின்றனர். அணை வலுவிழந்து விட்டதாக கூறி மக்களை  அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளனர். இதனைக் கண்டித்து  தமிழக விவசாயிகள் சார்பில் பல்வேறு எதிர்ப்புகளும், போராட்டங்களும்  நடத்தப்பட்டு வருகின்றன.

 Agricultural Association blockade struggle against the Kerala government

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி  தேக்கடியில் குமுளி எல்லை வரை உள்ளது. அங்குள்ள ஆனவச்சால் பகுதியில்  மெகா கார் பார்க்கிங் அமைப்பதற்கு கேரளா அரசு திட்டமிட்டு அதற்குரிய  வேலைகளை செய்து வருகிறது. அவ்வாறு அணையின் நீர்த்தேக்க பகுதியில்  எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களில் இருந்து கேரளா அரசு  வெளியேற வலியுறுத்தியும் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க  ஒருங்கிணைப்பாளர் பென்னிகுக் பாலசிங்கம், பேசும்போது, “முல்லைப்  பெரியாறு அணைக்கு எதிராக பொய்யான பிரச்சாரங்களை கேரளா தொடர்ச்சியாக பரப்பி வருகிறது. அம்மாநிலத்தின் எம்.பிக்கள் பலரும் இந்த  வேலையை பொதுமக்கள் மத்தியில் வேண்டுமென்றே செய்து அச்சம்    உண்டாக்கி வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் தமிழக விவசாயிகள்  சார்பாக கண்டிக்கின்றோம். முல்லைப் பெரியாறு அணையில், தமிழக  மக்களின் உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்”  என்று கூறினார்.

இதில் பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழக  விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினர். பாரதிய பார்வர்டு பிளாக், அகில இந்திய பார்வர்டு ப்ளாக், தமிழ்  தேசிய பார்வர்டு பிளாக், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், அனைத்து  விவசாய சங்கங்களின் கூட்டியக்கம், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு, விடுதலை சிறுத்தைகள், இந்தியன் தவ்ஹீத் ஜமாத், இந்து எழுச்சி முன்னணி,  ஆதித்தமிழர் பேரவை என பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின்  நிர்வாகிகளும், விவசாயிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்