ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெறவேண்டும் என வேண்டிக்கொண்ட ரசிகர் ஒருவர் அலகு குத்தி காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தியது பலரையும் வியக்க வைத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் 16வது சீசனுக்கான இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதி போட்டி நடைபெறும் என உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டு கிரிக்கெட் ரசிகர்களின் சந்தோஷத்திற்கு ஒரு நாள் முட்டுக்கட்டை போட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த ஐபிஎல் போட்டியோடு ஓய்வு பெறுவார் என பேசப்பட்டதால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் பல்வேறு வேண்டுதல்களை செய்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் கடைசி இரண்டு பந்தில் 10 ரன் தேவை என்கிற உச்சபட்ச பரபரப்புக்கு மத்தியில் சிக்ஸர், ஃபோர் என அடித்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார் ஜடேஜா. இந்த வெற்றியை ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த இளந்தமிழன் என்கிற இளைஞர் தோனியும் சென்னை அணியும் வெற்றி பெற வேண்டும் என வேண்டி உள்ளூர் மாரியம்மன் கோவிலுக்கு விரதம் இருந்து 12 அடி நீளம் கொண்ட அலகு குத்தி கவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி இருக்கிறார். இது குறித்து இளந்தமிழன் கூறுகையில், “2011 இல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை பெற்று தந்தபோதே தோனி மீது எனக்கு அளப்பரிய ஆர்வம் வந்தது. அவர் கலந்து கொள்ளும் மேட்சை நான் மறக்காமல் பார்ப்பேன். இது இறுதி ஆண்டாக இருக்கும் என பரவலாகப் பேசப்படுகிறது. அப்படி இருக்கக் கூடாது என்பது என்னுடைய விருப்பமாக இருந்தாலும், இந்த முறை சென்னை அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுதலாக இருந்தது. சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டேன் சென்னை அணி வெற்றி பெற்றதும் அந்த கடனை தீர்த்து இருக்கிறேன்" என்கிறார்.