சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி காணாமல் போனார். அன்றைய தினம் அவர் மதுரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தார் என்பது மட்டுமே கடைசியாக வந்த தகவல்... அதற்குமுன் ஸ்டெர்லைட் படுகொலை சம்மந்தமான சில ஆதாரங்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றோடு கிட்டதட்ட 120 நாட்கள் ஆகின்றன. கடந்த ஜூன் 6ம் தேதி ஹென்றி திபன் என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி அதிகாரிகள் முகிலன் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன என்றும், கிடைத்த தகவல்களை வெளியில் கூறினால் அவரை கண்டுபிடிக்கும் பணி மந்தப்படும் என்பதால் அதை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் முகிலன் குறித்த புதிய துப்பு கிடைத்துள்ளது என்றுகூறி அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள் சிபிசிஐடி காவல்துறையினர் அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், வழக்கு சரியான பாதையில் செல்கிறது என்றும், விசாரணை பாதிக்கப்படும் என்பதால் சிபிசிஐடியின் அறிக்கைகளை வெளியிடமுடியாது என்றும் தெரிவித்தனர். வழக்கை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.