அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சென்ற கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 10- க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்ததோடு நான்கு பேர் காயமடைந்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை 10.00 மணியளவில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுமான காமராஜ், சி.விஜயபாஸ்கர், பாஸ்கரன் ஆகியோர் திருவாரூரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களது வாகனங்கள் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நெடுஞ்சாலையில் முன்னும், பின்னுமாக சென்றுக் கொண்டிருந்தது. போட்டிப் போட்டுக் கொண்டு சென்றதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் முன்னாள் அமைச்சர்கள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.
அவர்களுடன் வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.