அதிமுக தலைமையில் இப்போது அமைந்திருக்கும் கூட்டணியே அடுத்த தேர்தலிலும் தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை (மார்ச் 9, 2019) காலை சேலம் வந்தார். ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியை பார்த்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரண்டு, மிரண்டு போய் உள்ளார். எப்படியாவது இந்தக் கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருகின்றன.
பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் அது கெட்டுவிடும். அதனால் கூட்டணி கட்சித் தொண்டர்கள் மிக கவனமாக இருந்து முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தலை சந்திக்க வேண்டும். இந்தக் கூட்டணியில் அதிமுகவும், பாமகவும் வலிமையான கட்சிகள். கூட்டணியின் வலிமையை நாம் தேர்தல் வெற்றி மூலம் உணர்த்த வேண்டும்.
தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் ஒரு மாத காலம்தான் அவகாசம் இருக்கும். அதனால் காலம் கடத்தாமல் அனைவரின் வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல் பெறுவதற்கு நாம் பாடுபட வேண்டும்.
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருக்கின்றன. கூட்டணி இறுதியான பின்னர், அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து ஊழியர் கூட்டம் நடத்த இருக்கிறோம்.
தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது கட்சியும் வளரும்; தமிழகமும் வளரும் என்பதால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதற்கு சமம். இந்த கூட்டணி, அடுத்து வரும் தேர்தலிலும் தொடரும். வருகிற தேர்தலில் வெற்றி பெறுவோருக்கு எதிர்காலம் அமோகமாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ, அவைத்தலைவர் பன்னீர்செல்வம் எம்பி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.