சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார் நடிகை குஷ்பு. கடந்த 25 நாட்களாக தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தனது பாணியில் கையாண்டார். பல முறை கால்கள் வீங்கி நடக்க முடியாமலும், வலியை பொறுக்க முடியாமலும் கஷ்டப்பட்டார் குஷ்பு. வலிகள் துன்புறுத்திய போதும் தொகுதியில் வாக்கு சேகரிப்பதிலும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதிலும் அவர் சோர்வடையவில்லை.
ஓட்டுப்போட்டுவிட்டு தொகுதிக்குள் வலம் வரவேண்டும் என்பதற்காக காலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்ட குஷ்பு, கிளம்புவதற்கு முன்பு, தனது நெருங்கிய தோழியான திமுகவின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியை நினைத்து தனது ட்விட்டர் பக்கத்தில், தனது எண்ணத்தைப் பதிவு செய்து விட்டு புறப்பட்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த 4 வாரங்களாக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த கன்மொழியை கரோனா தொற்று தாக்கியிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட்டானார். அவருக்கு மருத்துவ சிகிச்சை நடந்து வருகிறது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் நலமுடன் இருந்து வருகிறார் கனிமொழி.
இந்த நிலையில்தான், கனிமொழியை நினைத்து, தனது டிவிட்டர் பக்கத்தில், “சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் அன்பே” என தனது அன்பை வெளிப்படுத்தும் முகமாக பதிவு செய்துள்ளார் குஷ்பு. அவரின் இந்த பதிவு ஏகத்துக்கும் வைரலாகி வருகிறது.