நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
நகைச்சுவை மூலம் லஞ்சம், ஊழல், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை, சமூக சீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், அவருக்கு 'சின்ன கலைவாணர்' என்ற அன்புப் பட்டம் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். அதேபோல், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது கருத்துகளை மாணவர்களிடையே கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றியவர். மேடைகள் தோறும் கலாமின் கருத்துகளைப் பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சுற்றுச்சூழல் தொடர்பாகவும் அமைப்புகளை வைத்து மரம் நடுதல் போன்றவற்றை ஊக்குவித்தவர் விவேக். இதுவரை 33.23 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதேபோல், கிராமங்கள் தோறும் மரம் நடும் இளைஞர்களை ஊக்குவித்தும் வந்துள்ளார். நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில், கலைத்துறையில் மட்டுமல்லாமல் சமூக செயற்பாட்டிலும் ஈடுபட்ட நடிகர் விவேக்கின் உடலை அரசு மரியாதையோடு அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தததால், நடிகர் விவேக்கின் உடலை அரசு மரியாதையுடன் (காவல்துறை மரியாதை) அடக்கம் செய்ய தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது தேர்தல் நடத்தைகள் நடைமுறையில் இருப்பதால், தேர்தல் ஆணையத்திடம் இதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.