
திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அதிகாலை அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த திமுக தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அருகே கடந்த 8ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. கலைஞரின் இறுதி ஊர்வலத்தின் போது லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் மெரினாவில் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து திமுக தொண்டர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அதிகாலை அஞ்சலி செலுத்தினார். கலைஞர் காலமான நேரத்தில் சர்கார் படபிடிப்புக்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றிருந்தார். எனவே கலைஞருக்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்தவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய், நேரடியாக சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் சென்று கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது நினைவிடம் அருகே மலர் வளையம் வைத்து மரியாதையும் செய்தார்.