சென்னை, கலைவாணர் அரங்கத்தில் விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (29.12.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தோழர் இரா. நல்லகண்ணு 100 நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்" என்ற நூலினை வெளியிட்டார். இந்நிகழ்வில் நடிகர் விஜய்சேதுபதி பேசுகையில், “நல்லகண்ணு ஐயாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். விடுதலை 2 படத்தில் நடித்தது நல்லக்கண்ணு ஐயாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது.
நல்லண்ணு ஐயாவின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். விடுதலை 2 படத்தில் மஞ்சு வாரியர் சொல்லக்கூடிய வசனங்களைப் போல தோளில் துண்டு போடுவதும், காலில் செருப்பு அணிவதும், தீபாவளி பொங்கலுக்கு போனஸ் வாங்குவதும், 8 மணி நேர வேலை நேரமாக இருப்பதும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருப்பதும். நல்லகண்ணு மாதிரி பல தோழர்கள் போராடி ரத்தம் சிந்தித் தாக்கப்பட்டு உயிர் இழந்து வாங்கி கொடுத்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும்.
இது பற்றித் தெரியாத பல பேர்களில் நானும் ஒருத்தன். அதில் பலனடைந்த பல பேர்களில் நானும் ஒருத்தன். தோழர் நல்லகண்ணு பற்றித் தெரிந்து கொள்வது எனக்குச் சந்தோஷம். இரண்டு முறை அவரை நான் சந்தித்துள்ளேன். அவர் பக்கத்தில் இருந்து பேசி பழகினேன். ரொம்பவும் இனிமையான மனிதர். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் பெருமை அடைகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” எனப் பேசினார்.