Skip to main content

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை... - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

Actor Sarathkumar, actor Radhika jailed for one year ...- Chennai Special Court orders!

 

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா இருவருக்கும் ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

 

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார் இருவரும் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய 'மேஜிக் ஃபிரேம்ஸ்' என்ற நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு - நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தது. இதற்காக 1.5 கோடியை 'ரேடியன்ஸ் மீடியா' என்ற நிறுவனத்திடம் கடன் பெற்றிருந்தது. 2015ஆம் ஆண்டு மார்ச்சில் இந்தப் பணத்தை தந்துவிடுவதாகவும், பணத்தைக் கொடுத்தவுடன்தான் 'இது என்ன மாயம்' திரைப்படம் வெளியாகும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

 

ஆனால் சொன்னபடி நடந்துகொள்ளாமல் சரத்குமார், ராதிகா இணைந்து 'பாம்புசட்டை' என்ற படத்தை தயாரித்ததால், ரேடியன்ஸ் மீடியா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக சரத்குமார், ராதிகா தரப்பில் கொடுக்கப்பட்ட 7 செக்-களும் (cheque) பணமில்லாமல் திரும்பப்பட்டதால் சரத்குமார், ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூவரும் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் கூறிய நிலையில், மூவரும் ஆஜராகினர். இந்த வழக்கை எம்.எல்.ஏ, எம்.பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. மொத்தம் உள்ள 7 வழக்கில் 5 வழக்குகளில் சரத்குமார் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற இரண்டு வழக்கில் சரத்குமார், ராதிகா, ஸ்டீபன் ஆகிய மூவரும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையில் ஏழு வழக்குகளிலும் செக் மோசடி நடந்தது உண்மை என நீதிமன்றம் கண்டறிந்து, மூவரும் குற்றவாளிகள் என உத்தரவு பிறப்பித்துள்ளது. 7 வழக்குகளிலும் எதிர்மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு ஏழு வழக்குகளிலும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராதிகாவுக்கு இரண்டு வழக்குகளில் தலா ஒரு ஆண்டும், ஸ்டீபனுக்கு தலா ஒரு ஆண்டும் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

 

சிறை தண்டனை மூன்றாண்டை விட கீழான தண்டனை காலம் என்பதால், தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும் என சரத்குமார், ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகிய மூவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்