திரைப்பட இயக்குநரும் நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா(69) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மறைந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட நபராகத் திகழ்ந்தவர். இவரது மறைவு திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மனோபாலாவின் உடல் நாளை (04.05.2023) காலை 10.30 மணிக்கு வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மனோபாலாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த நடிகர் டெல்லி கணேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''யாராலும் இதை தாங்கிக் கொள்ள முடியாது. எனக்கும் மனோபாலாவிற்கும் இருந்தது இப்போதைய பழக்கம் இல்லை 1976-78ல் இருந்து பழக்கம். மயிலாப்பூரிலிருந்த காலத்தில் நைட்டு ரொம்ப நேரம் வெட்டியாக உட்கார்ந்து பேசிட்டு இருப்போம். அப்பொழுது அவர் பேச்சுலர். எனக்கு கல்யாணம் ஆகி இருந்தது. என் வீட்டில் சாப்பிட்டு விட்டுத்தான் போவாரு. அதன் பிறகு அவருடைய படத்தில் நடித்தேன். அப்புறம் கூடவே நடிச்சேன். அப்புறம் யூ டியூப் ஒன்னு ஆரம்பிச்சாரு. அதுல இன்டர்வியூ எல்லாம் கொடுத்து இருக்கேன்.
அவர் நல்ல நண்பர். அவருக்கு எதிரி என்று யாரும் கிடையாது. யாரையும் குறைத்து பேச மாட்டாரு. எல்லா இயக்குநர்களிடமும் நல்ல பேர் உள்ளது. தமிழ், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் படம் பண்ணினார். இன்னைக்கு அவர் உயிரிழந்ததாக வந்த செய்தி ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. நம்பவே முடியல. ஒரு இனிமையான நண்பனை இழந்து விட்டேன். நாலு நாளுக்கு முன்தான் அவரிடம் பேசினேன். வீட்டில் தான் இருக்கிறேன் என்று சொன்னார். உடம்ப நல்லா பாத்துக்கோன்னு சொன்னேன். நேத்து எல்லாம் ஃபோன் பண்ணினேன் எடுக்கவே இல்லை. அவருடைய மனைவியிடம் கூட இது குறித்து கேட்டேன். இல்ல சார் யாரு ஃபோனையும் எடுக்கல. முடியாம படுத்துட்டாருன்னு சொன்னாங்க'' என்றார்.