கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி பேசுகையில், ''மருத்துவர்கள் அவரை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஓரளவிற்கு முன்னேறி இருக்கிறார். விரைவில் பூரண குணமடைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எந்த பழிவாங்கும் நடவடிக்கையையும் திமுக எதிர்கொள்ளும். அரசியலுக்காக நடத்தப்படும் கைது நடவடிக்கையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்று தமிழக முதல்வர் சொன்னதை போல் ஒன்றிய அரசு பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் இருக்கக்கூடிய அமைச்சர்களையும், கட்சியினரையும் பழிவாங்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
டெல்லியாக இருந்தாலும், கர்நாடகமாக இருந்தாலும், மேற்கு வங்கமாக இருந்தாலும் அங்கே இருந்த நடவடிக்கை இன்று தமிழகத்திலும் தொடங்கி இருக்கிறது. இதற்கெல்லாம் அஞ்சுபவர் அல்ல நம்முடைய தமிழக முதல்வர். எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலும் திறமையும் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீண்ட காலமாக இருந்திருக்கிறது. எங்களை எல்லாம் பழிவாங்குவதற்கு கடந்த காலங்களில் ஏன் முதல்வரையே மிசாவில் போட்டு பழி வாங்கியவர்கள் எல்லாம் உண்டு. எதுவாக இருந்தாலும் எதிர்கொண்டு நிச்சயமாக இந்த ஒன்றிய அரசினுடைய பொய் பிரச்சாரத்தை, அரசியலுக்காக செய்கின்ற இந்த நிகழ்வுகளை தமிழக மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதை தெளிவாக இன்னும் புரிந்து கொள்வார்கள்'' என்றார்.