ஜீ5 நிறுவனம் தொடர்ச்சியாகத் தமிழில் திரைப்படங்களைத் தயாரிப்பதும், வெளியிடுவதுமாக உள்ளது. பல வெப்சீரிஸ்களையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய கிரைம் டாக்குமெண்டரி சீரிஸ் ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த டாக்குமெண்டரி சீரிஸின் டைட்டில் மற்றும் டிரைலரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. தீரன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ள இந்த சீரிஸை ஷரத் ஜோதி இயக்கியுள்ளார். அவரோடு ஜெயச்சந்திர ஹாஷ்மியும் வசந்த் பாலகிருஷ்ணனும் இணைந்து கதை எழுதியுள்ளனர். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார்.
இத்தொடரில், நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் பா.பா. மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். மேலும் வீரப்பன், “என்ன நடந்ததுனு என்னுடைய வாழ்க்கை வரலாறை அப்படியே எடுத்து சொல்றேன். தப்பு என்னுடையதா இல்ல அரசாங்கத்துதா..” எனப் பேசும் வீடியோ டிரைலரில் இடம்பெற்றுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு சீரிஸ்க்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடர் குறித்து நக்கீரன் ஆசிரியர் கூறியதாவது, “நக்கீரன் பெரும் முயற்சி எடுத்து பெரிய ஆபத்துகளை கடந்து வீரப்பனின் முதல் பேட்டி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டபோது, இந்தியா முழுவதும் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஆர்வம் இன்றும் குறையவில்லை. பல படங்களில் இதுவரை சொல்லப்பட்ட வீரப்பன் கதைகள் முழுமையானவை அல்ல. 1996-ல் நக்கீரன் எடுத்த வீடியோவை பல சர்வதேச சேனல்கள், நிறுவனங்கள் விலை கேட்டு வந்துள்ளன. யாருக்கும் தரவில்லை. இந்தக் கதையை நேர்மையாக, முழுமையாக சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் கதையும் அதில் இருக்க வேண்டும். இந்தக் கதையை திரிக்காமல் சொல்ல எனது மகள் பிரபாவதி மற்றும் அவர் உருவாக்கியுள்ள டீம் உழைத்துள்ளனர். வெறும் ஆவணப்படமாக அல்லாமல் ஒரு ஆக்ஷன் த்ரில்லருக்குரிய சுவாரசியத்தோடு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. இத்தனை வருடங்கள் காத்து வைத்த விலை மதிப்பில்லாத பத்திரிகை சாதனை, முதன் முறையாக 'கூச முனுசாமி வீரப்பன்' தொடராக ஜீ - ஃபைவ் OTT தளத்தில் வெளியாவதில் நக்கீரன் மகிழ்ச்சி கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இத்தொடர் பற்றி ‘தீரன் ப்ரொடக்ஷன்ஸ்’ மேலாண்மை இயக்குநர் பிரபாவதி இரா.வி கூறியிருப்பதாவது,
“நம் மக்களின் ரசனை பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் அடைந்துள்ளது. சர்வதேச படைப்புகள் பலவற்றையும் கண்டு நம் மக்களின் எதிர்பார்ப்பும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் மேம்பட்டுள்ளது. இந்த சூழலில் உள்ளூர் கதைகளை உலகத் தரத்தில் படமாக்கி வெளியிடும் நோக்கத்துடன் 'தீரன் ப்ரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். நக்கீரன் வெளிக்கொண்டு வந்த வீரப்பன் கதையை முதல் தயாரிப்பாக, அதுவும் உலகத் தரத்திலான ஆவணத் தொடராக உருவாக்கியிருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். ஜீ - ஃபைவ் OTT தளத்தில் எங்கள் 'கூச முனுசாமி வீரப்பன்' வெளிவந்த பிறகு, இந்தியாவில் 'docu-series' (ஆவணத் தொடர்) என்னும் வகைக்கு பார்வையாளர்கள் கோடிக்கணக்கில் பெருகப்போவது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.