திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் கடந்த 9 ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியைப் பத்மாவதி என்பவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 80 சவரன் தங்கநகை மற்றும் 4 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்காக வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் 4 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தங்க நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொள்ளையில் ஈடுப்பட்ட கோமெட்டேரி பகுதியைச் சேர்ந்த பாபு மற்றும் கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் சக்திவேல் மற்றும் வல்லரசு ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது ஏற்கெனவே மூன்று பேரும் கோயில் வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பாபு நகை புதைக்கப்பட்ட இடத்தை காண்பிப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் பெத்தூர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென பாபு காவலர்களைத் தள்ளிவிட்டு கைவிலங்குடன் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடிய பாபுவைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர் கை விலங்குடன் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொள்ளைச்சம்பவத்தில் தொடர்புடைய சக்திவேல், வல்லரசு ஆகிய இருவரிடமும் ஆலங்காயம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.