அண்மையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், அதற்கான சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சலுகைகளைத் தொடர்ந்து பெற ஆதார் எண் அவசியமானது தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழக அரசின் மானியங்கள், திட்ட பலன்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை மக்கள் வழங்குவது அவசியம். ஆதார் அட்டை இல்லாதோர் அந்த எண்ணைப் பெறும் வரை மற்ற ஆவணங்கள் அடையாள ஆவணங்களாக ஏற்கப்படும். மாநில அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களை மக்கள் மற்றும் பயனாளர்கள் தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்படுகிறது. ஒரே ஆவணமாக (ஆதார்) இருக்கும் பட்சத்தில் முறையாக சரியான பயனாளர்களுக்குத் திட்டங்கள் சென்று சேர்வதற்கு வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.