சென்னை அருகே செங்குன்றத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தா பெட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக இரண்டு பேரை அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''சென்னை காவல்துறையால் 9 கிலோ மெத்தா பெட்டமைன் கைப்பற்றியது இதுவே மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள். கடந்த வாரம் சென்னை ஆர்.கே.நகரில் போதைப் பொருளை கடத்தி வந்த டார்வின் வின்சன்(40), வாசிம் ராஜா(31), சௌபர் சாதிக்(32), வேணுகோபால்(46) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 317 கிராம் மெத்தா பெட்டமைன், 5 செல்போன்கள், ரொக்கம் 12,000 ரூபாய், 1 எடை மெஷின் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ராஜ்குமார் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து 9 கிலோ மெத்தா பெட்டமைனை பறிமுதல் செய்துள்ளோம். அந்த இருவரிடம் இருந்து ஒரு கார், இருசக்கர வாகனம், 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மெத்தா பெட்டமைன் மணிப்பூரிலிருந்து ரயில் வழியாகக் கொண்டுவரப்பட்டது என்கிற தகவல் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து கிடைத்துள்ளது. கொண்டு வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரைப் பிடிக்க அதி தீவிர குற்றப்பிரிவு தடுப்பு பிரிவினரை முடுக்கி விட்டிருக்கிறோம்'' என்றார்.