Skip to main content

வேலை வாங்கி தருவதாக ரூ. 76 லட்சம் மோசடி; முன்னாள் அமைச்சர் மீது புகார்!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

76 lakh rupees fraudulent to buy government jobs; Complain about the former minister!

 

சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 76.50 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொண்டு மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது அவரது உறவினர் ஒருவர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சேர்ந்த சரோஜா (மருத்துவர்) அதிமுகவின் மகளிர் அணி இணை செயலாளராக இருக்கிறார். கடந்த 2016 & 2021 வரை  அதிமுக ஆட்சியின்போது ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று, தமிழக சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். தேர்தலையொட்டி, சொந்த ஊரைவிட்டு ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினார். மீண்டும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றி வாய்ப்பை இழந்தார்.

 

இந்நிலையில், ஓய்வு பெற்ற கூட்டுறவு ஊழியர் குணசீலன் (64) என்பவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 76.50 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

 

அந்த புகாரில், "தமிழக கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வந்த நான், ஓய்வு பெற்ற பிறகு, தற்போது பத்திர எழுத்தராக பணியாற்றி வருகிறேன். மருத்துவர் சரோஜா அமைச்சராக இருந்தபோது, எங்களை அழைத்து சத்துணவுத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும், பணம் கொடுப்பவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் கூறினார். 

 

இதை நம்பி நானும், எனது மனைவியும் எங்களுக்குத் தெரிந்த 15 பேரிடம் 76.50 லட்சம் ரூபாய் வசூலித்தோம். முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் என்னுடைய வீட்டில் வைத்துக் கொடுத்தோம். அப்போது அவருடைய கணவர் மருத்துவர் லோகரஞ்சனும் உடன் இருந்தார். அந்த பணத்தை வைத்துத்தான் தற்போது ராசிபுரத்தில் அவர்கள் வசித்து வரும் வீட்டை கிரயம் செய்தனர். 

 

இதையடுத்து இரண்டாம் தவணையாக 26.50 லட்சம் ரூபாயை சரோஜா முன்னிலையில் அவருடைய கணவரிடம் கொடுத்தேன். ஆனால், அவர் உறுதியளித்தபடி நாங்கள் பரிந்துரை செய்த யாருக்கும் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள், எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பணத்தைக் கேட்டு தினமும் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுக்கின்றனர். எங்கள் நிலையை அவர்களிடம் கூறினாலும், பணத்தை உங்களிடம்தான் கொடுத்தோம். அதனால் நீங்கள்தான் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றனர். இந்த நெருக்கடியால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கும், குடும்பத்தினருக்கும் காவல்துறையினர் உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும்" என குணசீலன் தெரிவித்துள்ளார். 

 

புகார்தாரர் குணசீலன், முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உடன்பிறந்த அண்ணனுடைய மருமகன் ஆவார். இந்த புகார் குறித்து அமைச்சர் சரோஜா மீது வழக்குப்பதிவு செய்து ராசிபுரம் காவல்நிலைய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்