சங்கரன்கோவில் அருகில் உள்ள களப்பாகுளம் பகுதியில் நேற்று மாலை தாலுகா போலீசார் வாகன சோதனையிலிருந்த நேரத்தில் அந்த வழியாக வந்த 2 கார்களை மடக்கிச் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்திருக்கின்றனர். காரில் இருந்த பைகளில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவர, ஹவாலா பணம் மாற்றும் கும்பலா என்ற சந்தேகத்தில் அவர்களிடம் விசாரித்தபோது குளறுபடியான பதில் வர, சந்தேகப்பட்ட போலீசார் ரூபாய் நோட்டுகளைச் சோதனை செய்ததில் அவை கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
அவர்களை மடக்கி காவல்நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், சந்தோஷ், சிராஜ் கரீம், வீரபத்ரன், ஜெகதீஸ், ஈரோட்டைச் சேர்ந்த வளர்மதி (42), கிருஷ்ணவேணி (23) என்பது தெரியவந்திருக்கிறது. கள்ளநோட்டுகளுடன் இந்தக் கும்பல் ஈரோட்டிலிருந்து கோவில்பட்டி வழியாக சங்கரன்கோவில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் 7 பேரையும் கைது செய்த இன்ஸ்பெக்டர் மாதவன், 38 லட்சம் கள்ளநோட்டுகள், 2 லட்சம் ரொக்க பணம் மற்றும் 2 கார்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்.
கள்ளநோட்டுடன் இவர்கள் யாரைச் சந்தித்து கைமாற்ற வந்தனர் என விசாரணையை மேற்கொண்டு, இவர்களைப் பின்தொடர்ந்து வந்த கும்பலை கரூர் வரை விரட்டிச் சென்று வேலஞ்செட்டி அருகே மடக்கி 1 பெண் உட்பட 6 பேரை வளைத்திருக்கிறார்கள் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார்.