Skip to main content

அந்தியூர் வனப்பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழப்பு!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021
Forester fired

 

ஈரோடு மாவட்டம் அந்தியூரையடுத்துள்ள மலைப் பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. சென்னம்பட்டி வனச்சரகத்தில் மேற்குப் பீட் வனப் பகுதிகளில் இன்று வனத்துறையினர் வழக்கமான ரோந்து சென்றபோது கோவிலூர் புதுக்காடு வனப்பகுதியில் ஒரு யானை இறந்துக் கிடப்பதை கண்ட பணியாளர்கள், சென்னம்பட்டி வனச்சரக அலுவலர் செங்கோட்டையனுக்கு தகவல் கொடுத்தனர்.

 

சம்பவ இடத்துக்கு சென்ற வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவின் உதவியுடன் அந்த இடத்திலேயே யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர். இதில் உயிரிழந்த யானை சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், வயது முதிர்ச்சி காரணமாக சரிவர உணவு உட்கொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

 

இதையடுத்து சென்னம்பட்டி வனத்துறையினர் சம்பவ இடத்திலே அந்த யானையின் சடலத்தை வன விலங்குகள் உணவுக்காக விட்டு விட்டனர். 2 மீட்டர் நீளம் கொண்ட அந்த யானையின் தந்தத்தை அதன் உடலிலிருந்து எடுத்த வனத்துறையினர் அதை பாதுகாப்பாக கொண்டு சென்றனர். வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழக்கும் யானைகளை தடுக்கும் வகையில் வனத்துறையினர் சிறப்பு கவனம் செலுத்தி யானைகளை பாதுகாக்க வேண்டுமென வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்