ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய கொடிவேரி அணைப் பகுதி அருகே ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த கும்பலைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரன் (43), சேதுராமன் (30), சுரேந்திரன் (29), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம் ராஜ் (40) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நால்வரையும் கைது செய்தனர்.
இதேபோல் கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அழுக்குளி தேவேந்திர நகர் பகுதி அருகே அதே பகுதியைச் சேர்ந்த மதகன்குமார் (27) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதேபோல் காசிபாளையம் இந்திரா நகர் பகுதி அருகே அதே பகுதியைச் சேர்ந்த பரணி (25) என்பவர் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவரையும் போலீசார் கைது செய்தனர். இப்படி ஒரே நாளில் ஈரோட்டில் பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.