
கோவை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய முபராக்கை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு என்.ஐ.ஏ தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரிக்க, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை இந்து முன்னணி செய்தித்தொடர்பாளர் சசிக்குமார், மர்ம நபர்களால் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக சையது அபுதாகீர், சதாம் உசேன், சுபையர், முகம்மது முபாரக் ஆகியோரை கோவை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் என்.ஐ.ஏ. எனும் தேசிய புலானாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுபையர் மற்றும் முபாரக்கை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரி தேசிய புலனாய்வு முகமை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பூந்தமல்லி தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, என்.ஐ.ஏ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேணு கோபால், நீதிபதி ஹேமலதா அமர்வு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என்.ஐ.ஏ. மனுவை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.